June 8, 2012

பேஸ்புக் CHAT-ல் புகைப்படங்களை பகிர்வதற்கு

பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று CHAT வசதி.
இந்த வசதியின் மூலம் நண்பர்களிடம் மணிக்கணக்கில் அரட்டை அடித்து மகிழலாம். தற்போது இந்த சாட்டில் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
இதற்கு முதலில் நீங்கள் அனுப்ப வேண்டிய புகைப்படத்தை தெரிவு செய்து கொண்டு இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
Choose File என்ற பட்டனை அழுத்தி நீங்கள் சாட்டில் பகிர வேண்டிய புகைப்படத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
Captcha கோடினை சரியாக கொடுத்து Upload Now என்ற பட்டனை அழுத்தவும்.
புகைப்படத்தை பதிவேற்றம் செய்தவுடன், அதற்கான கோடிங் தயாராகி விடும். அதை முழுவதுமாக கொப்பி செய்து பேஸ்புக் சாட் விண்டோவில் பேஸ்ட் செய்து எண்டர் அழுத்தினால் அந்த புகைப்படம் உங்கள் நண்பருக்கு சென்றடையும்.

பாதுகாப்பா​ன தேடல்களை மேற்கொள்ள வசதியளிக்கு​ம் Firefox 13

இணையப் பக்கங்களை எமது கண்முன்னே காண்பிப்பதில் பல உலாவிகள்(Browsers) முக்கிய பங்கு வகிக்கின்றன.
எனினும் அவற்றுள் சிலவே பாதுகாப்பானதும், விரைவானதுமான சேவைகளை வழங்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்த படியாக பயனர்களின் வரவேற்பைப் பெற்ற உலாவி Firefox ஆகும். தற்போது Firefox ஆனது Firefox 13 எனும் புதிய பதிப்பை விரைவில் வெளியிடத் தயாராகவுள்ளது.
இப்பதிப்பானது முந்தைய பதிப்புக்களை விடவும் வேகம், பாதுகாப்பு, சிறந்த உலாவல் போன்றவற்றை வழங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகமாக பயணம் செய்யும் இணையப்பக்கங்களை தெரிவுபடுத்தும் வசதியுடன் bookmarks, browsing history, Firefox settings போன்றவற்றினை விரைவாக தெரிவு செய்யும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது

டுவிட்டருக்கு புதிய லோகா

டுவிட்டர் நிறுவனம் தனது ப்ளூபேர்டு லோகோவை(Blue Bird Logo) புதிதாக வடிவமைத்திருக்கிறது. இந்த புதிய லோகோவிலும் அதே ப்ளூபேர்டு தான் இருக்கிறது.
ஆனால் டுவிட்டர் நிறுவனம் இந்த பறவையின் வடிவமைப்பில் சில மாற்றங்களை செய்திருக்கிறது.
இந்த பறவையின் அலகு வானத்தை பார்த்தது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த டுவிட்டர் பறவை ஐந்து இறகுகளை கொண்டிருந்தது.
அதில் ஒரு இறகுக்கு கத்தரி போட்டுவிட்டதால், இப்போது இந்த புதிய லோகோவில் நான்கு இறகுகள் தான் உள்ளது.
பறவைக்கு ஹேர்கட்டும் செய்யப்பட்டுள்ளது. தலையில் இருந்த குருவி முடியையும் இப்போது காணவில்லை.
இருப்பினும் இந்த ட்விட்டர் பறவையின் இந்த புதிய லோகோவை பார்க்கும் போது, மிக சுதந்திரத்துடனும், நட்பு பாராட்டும் வகையிலும் பறப்பது போன்ற உணர்வை கொடுப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கைப்பினூ​டாக நாடித்துடி​ப்பை பரிசோதிக்க​லாம்

மனிதனில் ஏற்படும் பல்வேறு நோய் நிலைகளின் போது, உடல் நிலையை அறிந்து கொள்வதற்காக நாடித்துடிப்பு வீதம் அறியப்படுவது வழக்கமாகும்.
இச்செயற்பாட்டினை வைத்தியர்கள் நோயாளியின் அருகிலிருந்து நேரடியாகவே ஸ்ரெதஸ்கோப்பினைப் பயன்படுத்தி மேற்கொள்வார்கள்.
ஆனால் தற்போது தொலைவில் உள்ள நோயாளி ஒருவரின் நாடித்துடிப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ளது.
Eulerian Video Magnification எனும் இத்தொழில்நுட்பத்தின் மூலம் நோயாளி ஒருவரின் நாடித்துடிப்பு வீதத்தினை ஸ்கைப் போன்ற வீடியோ மென்பொருட்கள் மூலம் அறிய முடியும்.
MIT ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் மணிக்கட்டினை வீடியோப் பதிவு செய்து ஸ்கைப்பினூடாக வைத்தியருக்கு தெரிவிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் பற்றிய தகவல்கள் வெளியீடு

தொலைபேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று விளங்குவது அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும்.
இவற்றில் காணப்படும் ஆச்சரியப்படத்தக்க வசதிகளே முதன்மையான காரணமாகும். தவிர நீண்ட காலப் பாவனைக்கு உத்தரவாதமும் வழங்குவதாகக் காணப்படுகின்றது.
இதனால் இந்த ஐபோன்களின் புதிய வரவுகளை மக்கள் அதிகளவில் எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர்.
இறுதியாக வெளியிடப்பட்ட ஐபோன் 4s ன் வடிவமைப்பபு, வசதிகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணமே காணப்படுகின்றன.
இவற்றிற்கு விடை அளிக்கும் முகமாக ஐபோன் 5sன் வெளிப்பகுதியின் தோற்றம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
இவ்வாறே ஏனைய அமைப்புக்கள், வசதிகள் பற்றிய தகவல்களை அப்பிள் நிறுவனம் விரைவில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

June 7, 2012

கணணியில் ஏற்படும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும்

உங்கள் கணணி அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவதைப் போல இயக்கத்தினைக் காட்டுகிறதா? உடனே பதற்றம் அடைய வேண்டாம்.
பொதுவாக, கணணி இயக்கம் எந்த நேரமும் முன் அறிவிப்பின்றி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை. எந்த நேரத்திலும் இது நிகழும் என்பதால், அதனை எந்த நேரத்திலும் நாம் எதிர்பார்க்கவும் வேண்டும்.
உங்கள் சிஸ்டத்தில் தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மற்றவர்கள் கூறுவது மிகவும் சகஜமாகி விட்டது. முதலில் வேகமாக இயங்கிய கணணி, இப்போது மிகவும் குறைவான வேகத்தில் இயங்குகிறது, அடிக்கடி நீல நிறத்தில் திரையில் எச்சரிக்கை செய்தி கிடைக்கிறது, சிபியு கேபினிலிருந்து பிளாஸ்டிக் சற்று கருகியது போல வாசனை வருகிறது, சிறிய கிரைண்டர் ஓடுவது போல சத்தம் வருகிறது போன்ற பேச்சுக்கள் எல்லாம் கணணி சிஸ்டத்தில் குறை கூறும் குற்றச்சாட்டுக்களே.
இவை அனைத்திற்கும் இதுதான் தீர்வு என எதனையும் உறுதியாக எழுதித் தந்து விட முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு கணணியிலும் அது இயங்கும் சுற்றுப்புறச் சூழ்நிலை, உள்ளாகப் பதிக்கப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்கள், ஹார்ட் ட்ரைவின் தன்மை இவற்றைப் பொறுத்தே இந்த பிரச்னைகள் ஏற்படும். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
நாம் சந்தேகிக்கும் வகையில், சிபியு கேபினிலிருந்து சத்தம் வருகிறது என்றால், நிச்சயமாய் ஐந்து வாரங்களிலோ அல்லது ஐந்து நிமிடங்களிலோ ஹார்ட் ட்ரைவ் இயக்கத்தினை நிறுத்தப் போகிறது என்பதன் அடையாளமே அது.
எனவே அது போன்ற சூழ்நிலையில், உங்கள் கோப்புகள் அனைத்தையும் பக் அப் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த ட்ரைவினை உங்கள் கணணியில் பொருத்தலாம் என்பதனை அறிந்து, அதனை எங்கு வாங்கலாம் என்பதனை முடிவு செய்திடுங்கள்.
சில வேளைகளில், நாம் எந்த புரோகிராமின் ஐகான் மீது கிளிக் செய்தாலும், அது இயங்க வழக்கத்திற்கு மாறாக சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் பல காரணங்கள் உண்டு. உங்கள் ராம் மெமரியில் பிரச்னை இருக்கலாம்.
ஒரே நேரத்தில் பல புரோகிராம்களை நீங்கள் திறந்து வைத்து இயக்கலாம். அல்லது நீங்கள் அறியாமலேயே, பல புரோகிராம்கள் திறக்கப்பட்டு பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கலாம். ரன் விண்டோவில் msconfig என டைப் செய்து கிடைக்கும் விண்டோவில், start up என்ற டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் பட்டியலைப் பார்க்கவும்.
இதில் உங்களுக்குத் தேவைப்படாத சில புரோகிராம்கள் இருக்கலாம். சிலவற்றின் பெயர்கள் நீங்கள் இதுவரை கேள்விப்படாதவையாக இருக்கலாம். அவை குறித்து கூகுள் தேடல் மூலம், எத்தகைய பயன் தரும் புரோகிராம்கள் அவை என அறிந்து கொள்ளவும்.
அவை உறுதியாக நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்கள் எனில், அவற்றிற்கு எதிரே உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிட்டு, Apply என்பதில் கிளிக் செய்து பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றத்தினை இயக்க, நீங்கள் ரீபூட் செய்திட வேண்டிய திருக்கும்.
இன்னொரு பிரச்னை ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படும். தேவையற்ற அல்லது ஒருங்கிணைந்து செயலாற்றாத ட்ரைவர் புரோகிராம்கள் இவ்வாறு புரோகிராம் இயக்கத்தினைக் கொண்டு வராது. எனவே குறிப்பிட்ட புரோகிராமிற்கான அப்டேட் செய்யப்பட்ட ட்ரைவர் புரோகிராமினை தரவிறக்கம் செய்திடவும்.
சில வேளைகளில், கணணியை ஷட் டவுண் செய்திடுகையில், மற்றவர்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்துள்ளார்கள் (‘Other People Are Logged On to This Computer’); எனவே மூட வேண்டியது அவசியமா? என்ற கேள்வியுடன் ஒரு கட்டம் கிடைக்கும். உங்கள் கணணியில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் இருக்கலாம்.
இன்னொருவர் கணணியைப் பயன்படுத்தி, தன் பணியை முடித்த பின்னர் லாக் ஆப் செய்திடாமல் விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம். அந்நிலையில், நீங்கள் பயன்படுத்தி ஷட் டவுண்ட் செய்திட்டால், இந்த செய்தி கிடைக்கும். யூசர் அக்கவுண்ட்ஸ் சென்று, யார் அக்கவுண்ட் பயன்பாட்டில் உள்ளது என அறிந்து, அதனையும் சேர்த்து லாக் ஆப் செய்திடவும்.
கம்ப்யூட்டர் பூட் ஆகும் வேளையில் பீப் ஒலிகளை வெளிப்படுத்தி இயங்காமல் நின்றுவிடும். ஒவ்வொரு வகை பீப் ஒலியும் ஒருவகையான சிக்கலைக் காட்டுகிறது. மவுஸ், கீ போர்ட், வீடியோ கார்ட், ஹார்ட் ட்ரைவ் இணைப்பு என எதில் வேண்டுமானாலும் பிரச்னை இருக்கலாம்.
இந்த பீப் ஒலி கேட்க முடியாத வகையில் ஸ்பீக்கரில் பிரச்னை இருந்தால், உங்கள் நிலை சிக்கல் தான். ஒவ்வொன்றாக, நீங்கள் சரி செய்து பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்னைகளில், கணணியில் இணைக்கப்பட்டுள்ள, உள்ளே இணைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கேபிள்களை நீக்கி மீண்டும் இணைத்தாலே போதும்.
கேபிள்களை இணைத்த கையோடு, கனெக்டர்கள் சரியாகப் பொருந்தி உள்ளனவா என்று பார்க்கவும். சரியான முறையில் பொருத்தாமல், அதிக அழுத்தம் கொடுத்திருந்தால், கனெக்டர்களில் உள்ள பின்கள் வளைந்திருக்க சந்தர்ப்பம் உண்டு. அதனைச் சரி செய்திடவும்.
கிராஷ் ஆகாமலேயே, புளு ஸ்கிரீன் தோன்றாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் ரீபூட் ஆகிறதா? சிஸ்டம் கேபின் அதிக சூடு ஆகிறது என்று பொருள். சிபியு மேலாக உள்ள சிறிய மின் விசிறி நன்றாகச் சுழல்கிறதா எனச் சோதனை செய்திடவும். மற்ற மின்விசிறிகளையும் சோதனை செய்துவிட்டு, அவற்றைச் சுத்தம் செய்திடவும்.
சில வேளைகளில், நீங்கள் என்ன டைப் செய்தாலும், அந்த கட்டளை, சிபியுவிற்குச் செல்லாது. கீபோர்டில் இருந்து எந்த சிக்னலும் அனுப்பப்படாத நிலையை இது குறிக்கிறது. உங்கள் கீ போர்ட் யு.எஸ்.பி. கீ போர்டாக இருந்தால், உங்கள் பயாஸ் செட்டிங்ஸ், அதனை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.
பழைய PS/2 கீ போர்டு எனில், விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் சென்று, அதனை அன் இன்ஸ்டால் செய்து, கணணியை இயக்கவும். கணணி தானாக, அதனை உணர்ந்து இயக்கத்திற்கு எடுத்துக் கொள்ளும்.
சிபியு கேபினிலிருந்து வழக்கத்திற்கு மாறான ஸ்மெல் வருகிறதா? கணணிக்குச் செல்லும் மின் சக்தியை நிறுத்தி, எந்த பகுதியிலிருந்து இந்த வாசனை வருகிறது எனப் பார்த்து, அந்தப் பகுதியை மாற்றி, புதியதாக ஒன்றைப் பொருத்துவதே இதனைச் சரிப்படுத்தும் வழியாகும்.
இன்னும் நம்மால் அறியமுடியாத பிரச்னைகள் இருந்தால், அது அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினால் கூட இருக்கலாம். குறிப்பிட்ட அந்த தொகுப்பினை ரீ இன்ஸ்டால் செய்வதே இந்த சிக்கலிலிருந்து உங்கள் கணணியை விடுவிக்கும்.

Axis Browser: யாகூவின் புத்தம் புதிய உலாவி

தன் தேடல் சாதனத்தில் கூடுதல் வசதியாக, தன் உலாவி ஒன்றை ஆக்ஸிஸ் என்ற பெயரில் யாஹூ வழங்கியுள்ளது.
இது ஒரு தனி உலாவி இல்லை, ஏற்கனவே பயனாளர் பயன்படுத்தும் உலாவியில் ஒரு Plug-in சாதனமாய் இயங்குகிறது.
ஐபேட் மற்றும் ஐபோனில் பயன்படுத்த தனிப்பதிப்பு தரப்படுகிறது. குரோம், பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் சபாரி உலாவிகளுக்கான ஆக்ஸில் ப்ளக் இன் கிடைக்கிறது.
இது என்னவெனப் பார்க்கலாம்? பயனாளர் ஒருவர், தேடலை மேற்கொள்கையில் தேடல் முடிவுகள் பட்டியல்களாகப் பக்கம் பக்கமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பயனாளர் மீண்டும் ஒரு தேடலை நடத்தித் தான் விரும்பும் தளத்திற்கான லிங்க்கில் கிளிக் செய்கிறார்.
இந்த அலைச்சல் ஆக்ஸிஸ் உலாவியில் இல்லை. தேடல் முடிவுகள், அந்த தளங்களின் முன் பக்கங்களின் Thumbnail படங்களாக, ஒரே திரையில் நெட்டு வரிசையில் அதிக எண்ணிக்கையில் காட்டப்படுகின்றன.
இவற்றைப் பார்த்து தான் தேடிய தளத்தினைக் கண்டறிந்து கிளிக் செய்து ஒருவர் எளிதாகச் செல்ல முடியும். எனவே தேடலுக்கான கேள்வி, முடிவுகள், தளம் செல்லல் என மூன்று எளிய நிலைகளில் பயனாளர் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறார்.
யாஹூ தேடல் தளத்தினை 70 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான யாஹூ டூல் பார் ஒன்று வழங்கப்பட்டு தனி அடையாளத்துடன் இயங்குகிறது. இதனை 8 கோடி பேருக்கு மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, ஆக்சிஸ் பிரவுசரையும் தன் வாடிக்கையாளர்களிடம் எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என யாஹூ திட்டமிடுகிறது.
இப்போது மொபைல் வழி இன்டர்நெட் பயன்பாடு பெருகி வருவதால், இந்த ஆக்சிஸ் உலாவி திட்டத்தில் மொபைல் சாதனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, யாஹூ செயல்பட்டுள்ளது.
டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான பதிப்புகளை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனமும் இதனை வரவேற்றுள்ளது. ஏன் எனில் அதன் சபாரி உலாவிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பினையே, யாஹூ பயன்படுத்தி வருகிறது.
ஆக்சிஸ் உலாவி, மற்ற உலாவிகளைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது மொபைல் சாதனத்தில் மிக முக்கியமான, புதிய அம்சங்களைக் கொண்ட தேடல் சாதனமாக உருவெடுக்கும் என இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் பட்ராஸ்கி தெரிவித்துள்ளார்.

விண்டோஸ் 8-ஐ தரவிறக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்

அனைத்து வசதிகளையும் கொண்ட மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 இன் Release Preview-ஐ வெளியிட்டுள்ளது.
இணையத்தில் விண்டோஸ் 8 ஐ தரவிறக்கம் செய்வது எப்படி?
இந்த இணைப்பிற்குச் சென்று ISO image அல்லது நிறுவத் தேவையான வடிவில் தரவிறக்கம் செய்து விடலாம்.
தற்போது நீங்கள் பயன்படுத்தும் கணணியில் dual-boot முறையில் ஹாட்டிஸ்க்கின் மற்றுமொரு பதிப்பில் நிறுவுவதற்கு அல்லது பழைய விண்டோஸ் பதிப்பை மேம்படுத்தப் போகின்றீர்கள் என்றால் default Setup program ஐ தரவிறக்கம் செய்வதே நல்லது.
விண்டோஸ் 7 இருந்து விண்டோஸ் 8 ஐ மேம்படுத்தும் போது கணணியில் உள்ள மென்பொருட்களை மட்டுமே மீண்டும் நிறுவ வேண்டும்.
ஆனால் விண்டோஸ் XP அல்லது விஸ்டா மேல் விண்டோஸ் 8 நிறுவ முன்னர் மென்பொருட்கள் மற்றும் உங்கள் கோப்புக்கள் அழிந்துவிடும். எனவே கோப்புக்களை பக் அப் செய்து சேமித்து விட்டு நிறுவத் தொடங்குங்கள்.
விண்டோஸ் 8 இன் ISO இமேயை தரவிறக்கம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள்
1. Mac கணணியில் விண்டோஸ் 8 ஐ Boot Camp மென்பொருளை பயன்படுத்தி நிறுவ வேண்டுமாயின், விண்டோஸ் 8 இன் ISO பதிப்பை தரவிறக்கம் செய்யலாம்.
2. உங்கள் கணணி X64 Processor கொண்ட போதும் 32 பிட் விண்டோஸ் பதிப்பு இயங்குகின்றதா? அப்படியாயின் விண்டோஸ் 8 இன் 64 பிட் ஐ நிறுவ விரும்பினால் விண்டோஸ் 8 இன் ISO பதிப்பை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

கணணியை எவ்வளவு நேரம் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு

கணணியை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அதற்கு ஆக்டிவிட்டி மானிட்டர் என்ற புரோகிராம் உதவுகிறது.
இந்த புரோகிராம் ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்கு தருகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. விண்டோக்களை நாம் இணைத்தும் காணலாம்.
Work, School, Fun எனப் பிரிவுகளாகவும் இணைத்துக் காணலாம். குழந்தைகள் நம் கணணியை பயன்படுத்துவதாக இருந்தால், இத்தகைய கண்காணிப்புகள் அவர்கள் கணணியிலும், இணையத்திலும் என்ன செய்கிறார்கள் என்பதை காட்டும்.
இந்த புரோகிராமினை http://code.google.com/p/wamon/ என்ற முகவரியில் நீங்கள் பெறலாம்.

யாஹூ மின்னஞ்சல் கணக்கை நிரந்தரமாக அழிப்பதற்கு

வெகுநாட்களாக உபயோகிக்காமல் வைத்துள்ள யாகூ கணக்கை நீக்க வேண்டுமா? யாகூ மெயிலில் வரும் அதிகமான ஸ்பாம் மெயில்களின் தொல்லையால் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்க வேண்டுமா?
நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட யாகூ ஐடி வைத்துள்ளீர்களா, அதில் ஒன்றை அழிக்க வேண்டுமா? இது போன்ற பிரச்சினைகளில் அவதிபடுபவர்களாக இருந்தால் உங்களின் யாஹூ கணக்கை நிரந்தரமாக அழிக்கலாம்.
இதற்கு முதலில் கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று உங்களின் யாஹூ கணக்கின் பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்து உள்ளே செல்லுங்கள்.
அதில் உங்கள் கணக்கை அழிப்பதற்கான பக்கம் ஓபன் ஆகும், அதில் மேலும் ஒரு முறை உங்களின் அனுமதியை கேட்கும்.
திரும்பவும் உங்களின் கடவுச்சொல் கொடுத்து கீழே உள்ள Word Verification எழுத்துக்களை சரியாக நிரப்பவும்.
சரியாக கொடுத்த பின்னர் கீழே உள்ள Terminate This Account என்ற பட்டனை அழுத்தவும்.
Terminate This Account பட்டனை அழுத்தியவுடன் தற்காலிகமாக உங்களின் கணக்கு செயலிழந்து விடும். நிரந்தரமாக அழிப்பதற்கான உங்களின் கோரிக்கை யாஹூ நிறுவனத்திற்கு சென்று விடும்.
அவர்கள் 90 நாட்கள் வரை உங்களின் கணக்கு விவரங்களை பாதுகாத்து வைத்திருப்பார். ஒருவேளை நீங்கள் தவறுதலாக அழித்து விட்டீர்கள் திரும்பவும் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால் அந்த 90 நாட்களுக்குள் திரும்பவும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். 90 நாட்களுக்கு பிறகு உங்கள் கணக்கு நிரந்தரமாக அழிக்கப்பட்டு விடும்.
நீங்கள் யாஹூ மின்னஞ்சல் கணக்கை அழித்தால் யாஹூவின் மற்ற சேவைகளான Answers, Address book, profiles போன்ற மற்ற சேவைகளில் இருந்தும் உங்களின் தகவல்கள் நீக்கப்படும்.

இணையப் பாவனை​யைக் sMonitor 4.3.2.091

இணையத்தளப் பாவனைகளைக் கண்காணிக்க பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள sMonitor மென்பொருளானது பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இணைய இணைப்பின் TCP/IP hosts, பயனர்கள் தொடர்பான தகவல்கள், இணைப்பு பயன்படுத்தப்படும் துறை(Port) போன்றவற்றை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வல்லது.
மேலும் குறுந்தகவல்கள், Notifications போன்றவற்றை அனுப்பும் வசதியும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

அப்பிள் சாதனங்களில் புதிய முப்பரிமாண​த் தொழில்நுட்​பத்தில் கூகுள் மேப்

குறுகிய காலத்தில் விற்பனையில் உச்சத்தைத் தொட்டிருக்கும் அப்பிள் சாதனங்களில் கூகுள் மேப்பிற்கென புதிய முப்பரிமாணத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் கூகுள் ஏர்த்திலுள்ள முப்பரிமாணப் படங்களை அப்பிள் சாதனங்களின் இயங்குதளமான iOS களில் சிறந்த முறையில் அவதானிக்க முடியும்.
இவற்றுடன் சில வகையான அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களிலும் இம் முப்பரிமாணத் தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது.
2006ஆம் ஆண்டு கூகுள் மேப் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அவற்றில் எழுத்துக்கள் மூலமே இடங்கள் குறிப்பிடப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்படவிருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண கட்டிட மொடல்களை அடிப்படையாகக் கொண்டு இடங்களை அறிந்து கொள்ள முடியும்.

June 2, 2012

விண்டோஸ் 8 நுகர்வோர் தொகுப்பிற்கான ஷார்ட் கட் கீகள்

விண்டோஸ் 8 நுகர்வோருக்கான தொகுப்பினைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கான ஷார்ட் கட் கீகள் கீழே தரப்பட்டுள்ளன.
Alt: மறைக்கப்பட்ட மெனு பார் காட்டப்படும்.
Alt + D: அட்ரஸ் பார் தேர்ந்தெடுக்கப்படும்.
Alt + P: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் Preview Pane காட்டப்படும்.
Alt + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் முன்னோக்கிச் செல்லும்.
Alt + Shift + Tab: திறக்கப்பட்டுள்ள விண்டோக்களில் பின்னோக்கிச் செல்லும்.
Alt + F4: அப்போதைய விண்டோ மூடப்படும். டெஸ்க்டாப்பில் ஷட்டவுண் விண்டோ மூடப்படும்.
Alt + Spacebar: அப்போதைய விண்டோவிலிருந்து ஷார்ட் கட் மெனுவினைப் பெறும்.
Alt + Esc: திறந்திருக்கும் புரோகிராம்களைச் சுற்றி வரும். அவை திறக்கப்பட்ட வரிசையில் இது மேற்கொள்ளப்படும்.
Alt + Enter: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்திற்கான ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
Alt + PrtScn: அப்போதைய விண்டோ காட்சியின் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லப்படும்.
Alt + Up: விண்டோஸ் எக்ஸ்புளோரர் போல்டரில் ஒரு போல்டர் முன் செல்லப்படும். (எக்ஸ்பி (XP) சிஸ்டத்தில் Up Arrow போலச் செயல்படும்).
Alt + Left Arrow: முந்தைய போல்டரைக் காட்டும்.
Alt + Right Arrow: அடுத்த போல்டரைக் காட்டும்.
Shift + Insert CD/DVD: ஆட்டோ பிளே அல்லது ஆட்டோ ரன் கிளிக் செய்யப்படாமலேயே சிடி/டிவிடி இயக்கப்படும்.
Shift + Delete: தேர்ந்தெடுக்கப்பட்டது முற்றிலுமாக நீக்கப்படும். ரீசைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்லப்படாது.
Shift + F6: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும்.
Shift + F10: தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளுக்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Shift + Tab: விண்டோ அல்லது டயலாக் பாக்ஸில், பின் நோக்கிச் செல்லும். (Shift + F6 போல)
Shift + Click: தொடர்ச்சியாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கும்.
Shift + Click: டாஸ்க் பார் பட்டனில் கிளிக் செய்கையில், புரோகிராமின் புதிய இயக்கக் காட்சியைக் கொடுக்கும்.
Shift + Rightclick: தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கான்டெக்ஸ்ட் மெனுவினைத் தரும்.
Ctrl பட்டனுடன் பெரும்பாலும் தற்போது பழக்கத்தில் உள்ள செயல்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன. மாற்றம் எதுவும் இல்லை.

விண்டோஸ் 8ன் முந்தைய பதிப்பு வெளியீடு

இயங்குதளம், புதிய உலாவியின் பதிப்பு மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகையில், சோதனைப் பதிப்பு முதலில் வெளியிடப்படும்.
பின்னர் வெளியீட்டுக்கு முந்தையதாகப் பல பதிப்புகள் வெளியாகும். இவற்றிற்கான பின்னூட்டத் தகவல்களைப் பெற்று, ஒரு முழுமையான பிரச்னையற்ற வெளியீட்டினை மேற்கொள்ளவே இந்த வெளியீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வகையில் விண்டோஸ் 8 இயங்குதளம் முதலில், இதன் அடிப்படையில் புரோகிராம் தயாரிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. பின் நுகர்வோருக்கான பதிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஜூன் மாதம், வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முழுமையான வெளியீட்டிற்கு முன், வேறு சில பதிப்புகளும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்த தகவலை விண்டோஸ் பிரிவின் தலைவர் ஸ்டீபன் ஸினோப்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முழுமையான வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு, ஏறத்தாழ இறுதிப் பதிப்பு போலவே இருக்கும். எனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்கள் கூறும் நிறை குறைகள் கணக்கில் கொள்ளப்பட்டு, இயங்குதளம் சரி செய்யப்படும்.
இந்த பதிப்பு, நுகர்வோர் கருத்துக்களைப் பெறவே வெளியிடப்படும். விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மெட்ரோ இன்டர்பேஸ் இடை முகத்திற்கு இரு வகைகளில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இதனை வரவேற்பவர்கள் ஒரு புறம் இருக்க, பெரும்பாலானவர்கள், கீ போர்டு மவுஸ் கொண்டு இயக்கப்படும் பழைய வகை ஸ்டார்ட் மெனு அடங்கிய திரைக் காட்சியையே விரும்புகின்றனர்.
புதிய இடைமுகம் டேப்ளட் பிசியில் உள்ளது போலவே இருக்கிறது. டெஸ்க்டாப் பெர்சனல் கணணி போல இல்லை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பிற்கு, மக்கள் அளிக்க இருக்கும் பின்னூட்டுகள் மிகக் கவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்படும்.
விண்டோஸ் 7 சிஸ்டம், சென்ற 2009ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது எல்லாம் சரியாக மைக்ரோசாப் எதிர் பார்ப்பது போலச் சென்றால், வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 வெளியாகலாம்.

சில தொழில்நுட்ப சொற்களும், அதற்கான விளக்கங்களு

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கணணியை உபயோகப்படுத்துகின்றனர்.
இங்கு சில தொழில்நுட்ப சொற்களும், அதற்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
ஐ.பி. அட்ரஸ்(IP Address): நெட்வொர்க் மற்றும் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கணணிக்கு அடையாளம் தரும் முகவரி எண்.
ஸ்க்ராம்ப்ளிங்(Scrambling): கோப்பில் உள்ள தகவலினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது.
இதனால் அதனை உருவாக்கியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனை சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் கோப்பின் தகவல் உருப் பெறாது.
மதர்போர்ட்(Motherboard): பெர்சனல் கணணியில் உள்ள மெயின் சர்க்யூட் போர்டு. இதனுடன் மானிட்டர், கீ போர்டு, மவுஸ், பிரிண்டர், மோடம் போன்ற சாதனங்கள் இணைக்கப்பட்டு இயங்குகின்றன.
பயாஸ்(BIOS - Basic Input Output System): அனைத்து பெர்சனல் கணணிகளின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம்.
ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம்.
ஒரு கணணிக்கு மின் சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவையான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.

ஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு

ஜிமெயிலில் உள்ள Chat வசதியின் மூலம் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொள்ளலாம். இவ்வாறு அரட்டை அடிக்கும் விடயங்கள் அதன் History இல் காணப்படும்.
எனவே இன்னொரு தடவை நாம் அரட்டையை திறக்கும் போது பழைய அரட்டைகள் சில வேளைகளில் அழியாமல் காணப்படுவதுண்டு. இவை சிலருக்கு இடையூறாகக் காணப்படலாம்.
எனவே இவ் அரட்டைப் பகுதியில் உள்ள பழைய அரட்டைகளை எவ்வாறு தன்னிச்சையாகவே அழித்துக் கொள்ளும்படி வைக்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் ஜிமெயிலில் Settings பகுதிக்கு செல்லவும், தற்போது தோன்றும் விண்டோவில் CHAT என்ற tab ஐ கிளிக் செய்து கொள்ளவும்.
தற்போது படத்தில் உள்ள My Chat history: என்பதில் இரண்டு Radio buttons காணப்படும். இதிலே Never Save Chat History என்பதை கொடுத்து இப்பக்கத்தின் கீழே உள்ள Save என்பதைக் கொடுத்து சேமித்துக் கொள்ளவும்.
அவ்வளவு தான் இனிமேல் உங்கள் Chat History ஆனது தன்னிச்சையாகவே அழிக்கப்பட்டுவிடும்.

மிக வேகமாக செயல்படக்கூடிய கணணி சிப் கண்டுபிடிப்பு

வேகமாக இயங்கக் கூடியதும், அதிக பதிவுத் திறன் கொண்டதுமான புதிய கணணி சிப்பை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு மெம்ரிஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லண்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் அந்தோணி கென்யோன் கூறுகையில்,
இந்தச் சிப்பை மலிவான விலையிலே உருவாக்க முடியும் என்றும், இது இப்போது உள்ள செமிகண்டக்டர் சிப் உருவாக்கும் தொழில்நுட்ப அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ப்ளாஷ் மெமரி சிப்பை விட மெம்ரிஸ்டர் சிப் 100 மடங்கு அதி வேகமாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.

கட்டணம் ஏதும் இல்லாமல் உங்களுக்கென்று தனி இணையத்தளத்தை உருவாக்க


தங்களுக்கென்று தனி இணையத்தளத்தை உருவாக்க விரும்பும் நபர்கள், கட்டணத்தை செலுத்தி இணைய முகவரியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இலவசமாக இணையத்தளங்களை உருவாக்கி கொள்ளலாம். இதற்கென சில விதிமுறைகளையும் அந் நிறுவனங்கள் விதித்துள்ளன.

வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க

World Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார மையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் ஆகும்.
இதன் மூலம் உலகின் 130 தொன்மையான, அதிசய சுற்றுலா நகரங்களை பார்த்து ரசிக்கலாம்.
குறித்த இடங்களுக்கான Street View தொடர்பு வீடியோக்கள், புகைப்படங்கள், 3டி மாடல்கள் என நிஜமான பயண அனுபவத்தையே கண்முன் கொண்டுவருகிறார்கள்.

சிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளம்

இன்றைய காலகட்டத்தில் இணையம் தான் உலகையே ஆட்டிப் படைக்கின்றது, இதில் சிறுவர்களுக்கான பல்வேறு இணையத்தளங்களும் இருக்கின்றன.
Whyville என்னும் இந்த தளம் சிறுவர்களுக்கான சமூக வலைத்தளமாக இயங்குகிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் பணத்தை நிர்வகிப்பது, சரியான முறையில் உண்பது மற்றும் ஒன்லைன் பாதுகாப்பு போன்ற விடயங்களை கற்றுக் கொள்ளலாம்.
மற்றைய தளங்கள் போலவே சாட்டிங் சேவையும் பாதுகாப்பான முறையிலும் வழங்கப்படுகிறது. இச் சேவையை உபயோகிக்கும் முன் சிறார்கள் சாட்டிங் உரிமம் பெற வேண்டும்.
அதை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. இது தவிர சிறார்கள் தங்களுக்கென முகங்களை வடிவமைத்து உருவாக்கி கொள்வது, பல விளையாட்டு அம்சங்கள் என உள்ளன.
இத்தளம் பாதுகாப்பான முறையில் ஒன்லைனில் பாவிக்கும் அடிப்படை விடயங்களை கற்றுத் தருகிறது.

மைக்ரோசொப்ட் அறிமுகப்படு​த்திய சமூக வலையமைப்பு


மக்களிடையே நல்லுறவைப் பேணும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள சமூக இணையத்தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் மைக்ரோ சொப்ட் நிறுவனமும் சமூக வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தது.
அதற்கிணங்க So.cl என்ற பெயரில் தனது தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பொருளானது social (சமூகம்) என்பதாகும். இதற்கான அடித்தளம் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாசிங்டன் பல்கலைக்கழகம், நியூயோர்க் பல்கலைக்கழகம் மற்றும் Syracuse பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களால் இடப்பட்டது.
இதன் மூலம் போட்டோக்கள், வீடியோக்கள், டெக்ஸ்ட், போன்ற பல்வேறு கோப்புக்களையும் குழுக்களுக்கிடையில் பகிர்ந்துகொள்ள முடியும்.

7வது பிறந்த நாளை கொண்டாடுகிறது யூடியூப்


பிரபல சமூக வலைத்தளமான யூடியூப் தனது 7வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் புரூனோ என்ற இடத்தை மையமாக கொண்டு செயற்படும் யூடியூப் பெப்ரவரி 15, 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இதையடுத்து இந்த இணையத்தை அக்டோபர் மாதம் 2006ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வாங்கியது. இதில் 6.1 மில்லியன் காணொளிகள் உள்ளன.
இந்நிலையில் தனது 7வது பிறந்தநாளை முன்னிட்டு யூடியூப் வெளியிட்டுள்ளதாவது, எங்களது சமூக வலைதளம் 7 ஆண்டு மைல் கல்லை அடைந்துள்ளது.
உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் யூடியூப்பை பகிர்ந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளத்தை தொடங்கியது மைக்ரோசாப்ட் (வீடியோ இணைப்பு)

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்கியுள்ளது.
இதற்கு முன்பு, So.Cl என்ற முகவரியில் 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனியார் பீட்டாக செயற்பட்டு வந்தது.
இது தற்போது அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆய்வுகள், சமூக தேடல்கள் உள்ளிட்ட வசதிகளை பெருக்குவதற்காக இந்த வலைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியப்பில் ஆழ்த்தும் மைக்ரோசொப்டின் இணையம்

இன்றைய இணைய உலகில் நாளுக்கு நாள் விதவிதமான இணையத்தளளங்கள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கின்றன.
அதே போன்று மைக்ரோசொப்டின் சோதனை பதிப்பில் உள்ள இணையத்தளமான Touch Effects புது வித வடிவில், அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தை ஓபன் செய்தால் புள்ளிகளுடன் ஒரு இணையதளம் வரும், அதில் உங்கள் மவுஸ் கர்சரை பயன்படுத்தி க்ளிக் செய்தும் Drag செய்தும் பாருங்கள். அங்குள்ள புள்ளிகளில் நடக்கும் ஜாலத்தை பாருங்கள்.
உங்களின் மவுசை திரையின் மீது வைத்து அழுத்தி இழுத்தால் அதற்கேற்ப உங்கள் திரை வண்ணமயமாக ஜொலிப்பதை காணலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் IE உலவிகளில் நன்றாக வேலை செய்கிறது.

Daylight Viewfinder: புகைப்படங்​கள் எடுப்பதற்கு பயன்படும் ஐபோன் சாதனம்

கைபேசிகள் வைத்திருக்கும் நபர்கள் தங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை எடுப்பது என்பது வழக்கமான ஒன்று தான்.
ஐபோன்களைப் பயன்படுத்தி பகல் வேளைகளில் புகைப்படங்கள் எடுக்கும் போது சூரிய ஒளியின் குறுக்கீடுகள் காணப்படலாம்.
இதனால் புகைப்படங்களில் வேண்டத்தகாத எபெக்ட்கள் உருவாகி எரிச்சலை உண்டு பண்ணும்.
இவ்வாறான பிரச்சினைக்குத் தீர்வாக Daylight  Viewfinder எனும் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பால் அன்டர்சன் என்பவர் வடிவமைத்துள்ளார்.
இதன் மூலம் புகைப்படம் எடுக்கும் போது குறித்த சூழலில் காணப்படும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.

ஐபோன்களுக்கா​ன அதிநவீன USB சார்ஜர்

கைபேசி உலகில் அதிகளாவான தொழில்நுட்ப வசதிகளைத் தன்னகத்தே கொண்டு குறைந்த காலத்தில் பிரபல்யமான ஐபோன்களை சார்ஜ் செய்வற்காக அதிநவீன USB சார்ஜர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
twing வடிவமைப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த சாதனத்தின் வடமானது(cable) 102 மில்லி மீட்டர்கள் நீளம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேவைக்கு ஏற்ப இணைப்பிலுள்ள ஐபோன்களை நிலைக்குத்தாக நிறுத்தி வைப்பதற்காக சமாந்தரமான மூன்று வடங்கள் காணப்படுகின்றது. இதன் மூலம் முக்காலி வடிவில் நிலைக்குத்தாக நிறுத்த முடியும்.