June 7, 2012

Axis Browser: யாகூவின் புத்தம் புதிய உலாவி

தன் தேடல் சாதனத்தில் கூடுதல் வசதியாக, தன் உலாவி ஒன்றை ஆக்ஸிஸ் என்ற பெயரில் யாஹூ வழங்கியுள்ளது.
இது ஒரு தனி உலாவி இல்லை, ஏற்கனவே பயனாளர் பயன்படுத்தும் உலாவியில் ஒரு Plug-in சாதனமாய் இயங்குகிறது.
ஐபேட் மற்றும் ஐபோனில் பயன்படுத்த தனிப்பதிப்பு தரப்படுகிறது. குரோம், பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் சபாரி உலாவிகளுக்கான ஆக்ஸில் ப்ளக் இன் கிடைக்கிறது.
இது என்னவெனப் பார்க்கலாம்? பயனாளர் ஒருவர், தேடலை மேற்கொள்கையில் தேடல் முடிவுகள் பட்டியல்களாகப் பக்கம் பக்கமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பயனாளர் மீண்டும் ஒரு தேடலை நடத்தித் தான் விரும்பும் தளத்திற்கான லிங்க்கில் கிளிக் செய்கிறார்.
இந்த அலைச்சல் ஆக்ஸிஸ் உலாவியில் இல்லை. தேடல் முடிவுகள், அந்த தளங்களின் முன் பக்கங்களின் Thumbnail படங்களாக, ஒரே திரையில் நெட்டு வரிசையில் அதிக எண்ணிக்கையில் காட்டப்படுகின்றன.
இவற்றைப் பார்த்து தான் தேடிய தளத்தினைக் கண்டறிந்து கிளிக் செய்து ஒருவர் எளிதாகச் செல்ல முடியும். எனவே தேடலுக்கான கேள்வி, முடிவுகள், தளம் செல்லல் என மூன்று எளிய நிலைகளில் பயனாளர் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறார்.
யாஹூ தேடல் தளத்தினை 70 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான யாஹூ டூல் பார் ஒன்று வழங்கப்பட்டு தனி அடையாளத்துடன் இயங்குகிறது. இதனை 8 கோடி பேருக்கு மேலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, ஆக்சிஸ் பிரவுசரையும் தன் வாடிக்கையாளர்களிடம் எளிதாகக் கொண்டு செல்ல முடியும் என யாஹூ திட்டமிடுகிறது.
இப்போது மொபைல் வழி இன்டர்நெட் பயன்பாடு பெருகி வருவதால், இந்த ஆக்சிஸ் உலாவி திட்டத்தில் மொபைல் சாதனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, யாஹூ செயல்பட்டுள்ளது.
டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான பதிப்புகளை உருவாக்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனமும் இதனை வரவேற்றுள்ளது. ஏன் எனில் அதன் சபாரி உலாவிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பினையே, யாஹூ பயன்படுத்தி வருகிறது.
ஆக்சிஸ் உலாவி, மற்ற உலாவிகளைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது மொபைல் சாதனத்தில் மிக முக்கியமான, புதிய அம்சங்களைக் கொண்ட தேடல் சாதனமாக உருவெடுக்கும் என இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் பட்ராஸ்கி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment