May 16, 2012

விண்டோஸ் 8 இயங்குதளம் குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டது மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் பெருமையுடன் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் விண்டோஸ் 8 இயங்கு தளம் குறித்த முதல் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
முதலில் இயங்கு தளம் சார்ந்து புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் நுகர்வோருக்கான சோதனைப் பதிப்பு வெளியானது. தற்போது இதன் பெயர் மற்றும் பதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய இயங்கு தளத்தின் பெயர் விண்டோஸ் 8 ஆகத் தான் இருக்கும். இதில் மாற்றம் எதுவும் இல்லை. அடுத்ததாக, இயங்கு தளம் ஒன்றின் பல்வேறு வகை பதிப்புகளை வெளியிடுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வழக்கம்.
இதனால் மக்கள் எதனை விடுத்து, எதனைப் பெறுவது என்பதில் குழப்பம் அடைவார்கள். தற்போது அந்தக் குழப்பத்திற்கு இடம் அளிக்க விரும்பாமல், மொத்தம் மூன்றே மூன்று பதிப்புகள் மட்டுமே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. X86/64 ப்ராசசர் அடிப்படையில் இயங்க விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8 ப்ரோ வழங்கப்படுகிறது.
விண்டோஸ் 8 அதிகமான நுகர்வோர் விரும்பித் தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்கும். இது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் பதிப்பின் இடத்தில் இடம் பெறும். இதில் மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர், டாஸ்க் மானேஜர் மற்றும் கூடுதலான மானிட்டர்களைப் பயன்படுத்தும் வசதி ஆகியவை இதில் இருக்கும்.
மேலும் மொழிகளுக்கிடையே மாற்றிக் கொள்வது இந்த இயங்கு தளத்தில் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். இந்த வசதி முன்பு அதிகப் பணம் செலுத்தி வாங்கக் கூடிய இயங்கு தளத்தில் மட்டுமே தரப்பட்டது.
விண்டோஸ் 8 ப்ரோ சிஸ்டம் வர்த்தக, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கானது. இதில் சுருக்கிய பார்மட்டில் அமைக்க பிட் லாக்கர்(BitLocker) என்கிரிப்ஷன் வசதி, கணிப்பொறி இயக்கத்தினை அமைத்துச் சரி பார்க்கும் வசதி, விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து பூட் செய்திடக் கூடிய வசதி, பெர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பு மற்றும் செயல்முறை நிர்வாகம், விண்டோஸ் இணைய தள இணைப்பு ஆகியவை கிடைக்கும்.
தற்போது இந்த வசதிகள் யாவும் Windows 7 Ultimate and Enterprise சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த இயங்கு தளத்திற்கு மட்டும் மீடியா பேக் (‘Windows Media Pack’) என அழைக்கப்படும் விண்டோஸ் மீடியா சென்டர் இயக்கம் ஒரு கூடுதல் தொகுப்பாகக் கிடைக்கும்.
இந்த இரண்டும் தனியாகவும், பெர்சனல் கணணிகளில் அவற்றை விற்பனை செய்திடும் நிறுவனங்களால் பதியப்பட்டும் கிடைக்கும். இவை தவிர வேறு வகை சிஸ்டம் கிடைக்காது. ஆனால் சீனா மற்றும் வளர்ந்து வரும் சில நாடுகளில் மட்டும், அந்த நாட்டு மொழியில் விண்டோஸ் 8 சிஸ்டம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கக் கூடிய விண்டோஸ் 8 சிஸ்டத்தினை மைக்ரோ சாப்ட் விண் ஆர்.டி. (Windows Runtime (WinRT)) என அழைக்கிறது. இது பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கானதாக இருக்கும்.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தின் விலை குறித்து மைக்ரோசாப்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment