May 6, 2012

மேக் கணணிகளை தாக்கும் ட்ரோஜன் வைரஸ்கள்

வைரஸ் தாக்குதல் எல்லாம் விண்டோஸ் இயங்கும் கணணிகளில் தான் நடக்கும், மேக் சிஸ்டம் இயங்கும் கணணிகளை ஒன்றும் செய்ய முடியாது என்ற கூற்றினைத் தவிடுபொடியாகச் செய்துவிட்டது தற்போதைய பிளாஷ் பேக் ட்ரோஜன் வைரஸ்.
ஏறத்தாழ ஆறு லட்சத்திற்கும் மேலான மேக் கணணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. விண்டோஸ் கணணிகளைப் பெருமளவில் பாதித்த கான்பிக்கர்(‘Conficker’) வைரஸ் பாதிப்பினைக் காட்டிலும் இதன் தாக்கம் அதிகம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கான்பிக்கர் வைரஸ், பன்னாட்டளவில் 70 லட்சம் கணணிகளைப் பாதித்தது. எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் கான்பிக்கர் சேதம் தான் அதிகம் என்றாலும், உலக அளவில் மேக் மற்றும் விண்டோஸ் பயன்படுத்தப்படும் கணணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், மேக் கணணி பாதிப்புகள் தான் அதிகம்.
தற்போது கிடைத்துள்ள புள்ளிவிபரப்படி, மேக் சிஸ்டம் பயன்படுத்தப்படும் கணணிகளின் எண்ணிக்கை, மொத்த கணணிகளில் 6.54 சதவிகிதமாகும். விண்டோஸ் 92.48 சதவிகித கணணிகளில் உள்ளது. இந்த அளவில் பார்க்கையில், கான்பிக்கர் சேதத்தினைக் காட்டிலும் பிளாஷ்பேக் ட்ரோஜன் வைரஸ் பாதிப்புதான் அதிகம் எனத் தெரிய வரும்.
மேக் கணணிகளைப் பாதித்து வரும் இந்த வைரஸ் புரோகிராமினை ட்ரோஜன் வைரஸ் எனப் பெயரிடுவது கூடத் தவறு என இந்தத் துறையில் உள்ளவர்கள் கூறுகின்றனர். முதலில் இந்த வைரஸ் பாதித்த கணணிகளை ஆய்வு செய்தவர்கள் இதனை ட்ரோஜன் வகை செயல்பாடு மேற்கொள்ளும் வைரஸ் எனவே எண்ணினார்கள்.
ட்ரோஜன் வைரஸ் எப்போதும் நல்லது செய்வதாகக் காட்டிக் கொண்டு, ஏமாற்றி கணணி உள்ளே சென்று, தங்கியவுடன் தன் நாசவேலையைக் காட்டும். முதலில் இந்த வைரஸ் வந்த போது இப்படித்தான் கணணிகளுக்குள் நுழைந்தது.
அடோப் பிளாஷ் புரோகிராமிற் கான அப்டேட் கோப்பு இருப்பதாகக் கூறி, பயனாளர்களை லிங்க்கில் கிளிக் செய்திட வைத்து, கணணியின் உள்ளே செல்கிறது. பின் தீயவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் இப்போது அனுப்பப்படும் வைரஸ், பயனாளரிடமிருந்து எந்த செயல்பாட்டினையும் எதிர்பார்க்கவில்லை.
பயனாளர் ஒருவர், வைரஸ் ஏற்கனவே பாதித்த இணையத்தளத்திற்குச் சென்றவுடன், பிளாஷ்பேக் வைரஸ் தானாகவே தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.
கணணியில் வைரஸ் செயல்பாட்டினைத் தடுக்கும் புரோகிராம் இல்லை எனில், கணணியைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
மேக் கணணி பயன்படுத்துபவர்களில் பெரும் பாலானவர்கள், தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வைரஸ்களுக்கு எதிராக மிக வலுவானது என்ற எண்ணத்தில், எந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினையும் பயன்படுத்துவது இல்லை.
அதே போல எந்தவித எச்சரிக்கை உணர்வும் இல்லாமல், இணையத்தளங்களில் காணப்படும் லிங்க்கில் கிளிக் செய்துவிடும் பழக்கத்தினையும் கொண்டுள்ளனர்.
இதுவே மேக் கணணிகளை இந்த பிளாஷ்பேக் வைரஸ் தாக்குவதற்கான வழிகளை எளிதாக அமைத்துக் கொடுத்துள்ளது. பெரிய அளவில் பரவி கெடுதல் விளைவிக்கும் நிகழ்வும் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னைக்கு ஆப்பிள் நிறுவனத்தைக் குறை கூற முடியாது. ஏனென்றால், வைரஸ் பரவுவதற்கான சூழ்நிலை மேக் இயங்குதளங்களில் உருவாகவில்லை. ஜாவா குறியீடுகளில் உள்ளது.
அநேகர் மேக் இயங்குதளத்திற்கு மாறி வருவதால், ஆப்பிள் நிறுவனம் தன் பொறுப்பினை உணர்ந்து, அதனை மிக வலுவானதாக வடிவமைத்துத் தருகிறது. அதனால் தான், இந்த வைரஸ் தர்ட்டி பார்ட்டி புரோகிராமான பிளாஷ் பேக் மற்றும் ஜாவா அடிப்படையில் தாக்குதலை நடத்துகிறது.
இருப்பினும் ஆப்பிள் தொடர்ந்து தன் நம்பகத் தன்மையைத் தக்க வைத்திட, இது போன்ற தாக்குதல்களிலிருந்து தன் வாடிக்கையாளர்களைக் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment